அறம் என்பது யாதெனில்…

அறம். உயிரெழுத்துகளின் முதல் எழுத்துடன் தொடங்கும் அழகிய தமிழ்ச் சொல். அழகிய சொல் மட்டுமின்றி நம் வாழ்வியலில் மிக ஆளுமை கொண்ட சொல்லுமாகும். சிறு வயதில் ஒளவையாரின் ‘அறம் செய்ய விரும்பு’ என்ற ஆத்திச்சுடி வரி தான் இந்த சொல்லை எனக்கு முதன் முதல் அறிமுகப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக இச்சொல் என்னை மிகவும் ஆட்க்கொள்ளத் தொடங்கியது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்தக் காரணத்தை அறிந்துகொள்ள முயலும்பொழுது கிடைத்த புரிதல்களையே தொடர் பதிவுகளாக எழுத முயற்சி செய்யப் போகிறேன்.

அறம் என்றதன் மேற்பர்வையான பொருள் மட்டுமே ஓரளவுக்கு எனக்குத் தெரிந்திருந்தது. எனவே அதன் உட்கருப்பொருளை தேடத் தொடங்கினேன். என்னைப் பொறுத்த வரை, எதுவொன்ன்றின் கருப்பொருளையும் தெரிந்துகொள்ள, முதலில் பொது அல்ல வெகு ஜன மனிதர்களின் தினசரி வாழ்கையில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அது அவர்கள்தம் வாழ்கையில் என்னென்ன தாக்கங்களையும், ஆளுமைகளையும் ஏற்படுத்துகின்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிதலின் மூலமே அந்த உட்கருப்பொருளின் எளிமையான வடிவத்தை காணலாம். எளிமையான புரிதல் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

ஆகவே என் தேடல் வெறும் அறம் என்றால் என்ன என்பதை மட்டும் இல்லாமல் அதன் கருப்பொருளின் எளிமையான புரிதலையும் இல்லக்காக நோக்கி செல்ல ஆரம்பித்தது. குழந்தைகளுக்கு ஒன்றை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பல நேரம் நாம் கதை சொல்லி புரிய வைப்போம். நானும் அது போல்  பொது ஜன மக்களின் வாழ்க்கையின் வழியாக அறம் பற்றிய கருத்துக்களை கதைகளாக சொல்லும் புத்தகங்களை தேடும் பொழுது ஜெயமோகனின் ‘அறம்’ நூல் பற்றி அறிந்தேன். புத்தகம் வாங்கினேன். மொத்தம் 13 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும், அதன் களமும் வெவ்வேறு காலகட்டங்களிலும், சமூக தளங்களிலும் பயணித்து அந்தந்த சூழ்நிலைகளை காட்சிபடுத்துகின்றன. அதில் வரும் நாயக நாயகிகள்  – நாம் தினம் காணும் சக மனிதர்களிலிருந்து காலம் மறைத்து கல்லறைக்கு அனுப்பிய மாந்தர்கள் வரை வியாபிக்கிறார்கள்.

ஒவ்வொரு கதையின் வழியாக நான் புரிந்து கொண்ட அறம் பற்றிய என் புரிதல்களே இனிவரும் பதிவுகளில்.

One thought on “அறம் என்பது யாதெனில்…

  1. Good improvement in your way of writing. I guessed from the title itself JeMo’s ‘ARAM’ series short stories would have inspired you. That is reflecting in ur writing style too. Keep writing. Expecting more such posts from you 🙂

Leave a comment