மனிதம்

விழிகள் மெதுவாக திறந்தன.அடுத்த நொடியே இமைகள் இரண்டும் பிரிய மனம் இல்லாமல் மீண்டும் சேர்ந்தன. இப்படியே முன்னால் இருந்த கடிகாரத்தின் நொடி முள்ளின் ஒவ்வொரு அசைவுகளோடு அவள் கண் இமைகளும் பிரிந்து சேர்ந்து கொண்டிருந்தது.இருளும் ஒளியும் மாறி மாறி கண் முன் வந்து போய் கொண்டிருக்க,

‘அம்மா..’ என்று அழைத்தாள் அஞ்சலி.

அந்த அழைப்பு அவள் செவிகளுக்கே விழவில்லை என்றாலும்,இரண்டு நாள் கண் விழித்து தன்னை அறியாமல் தூங்கிக்கொண்டிருக்கும் அவள் அம்மா கவிதாவிற்கு கேட்டது.இது தான் மற்றவருக்கும் அம்மாவிற்கும் உள்ள வித்தியாசமோ!!மற்றவர்கள் நம் வாய் பேசும் வார்த்தைகளை மட்டுமே கேட்பார்கள்.ஆனால் இவள் நம் மனம் பேசும் வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டிருப்பாள்.

அடுத்த நொடி, ‘என்ன மா ?’ என்று கேட்டாள் கவிதா.

‘தண்ணீ!!!’ என்று அந்த வார்த்தையை கூட சொல்ல திராணி இல்லாமல் கேட்ட அஞ்சையிடம், அவள் இன்னும் ஒரு நாள் முழுவதும் எதுவும் எடுத்துக்க கூடாது என்பதை சொன்னால் கேட்டுக்கொள்ள மாட்டாள் என்று தெரிந்திருந்த கவிதா,

‘இல்ல மா.. இன்னும் கொஞ்ச நேரத்துக்கு எதுவும் எடுத்துக்க கூடாது டா…’ என்று சொல்லி சமாளித்தாள்.மணி ஒன்பதை தொட்டத்தை உணர்ந்த கவிதா வெளியில் இருந்த நர்ஸ் ஒருத்தரை அழைத்தாள்.

மருந்து குடுக்குற டைம் இல்லைங்க?

ஆமா, நானே வரணும்னு தான் நெனச்சிட்டு இருந்தேன்.. நீங்களே கூபிட்டீங்க…

ஏற்கனவே அஞ்சலியின் கையில் க்ளுகோஸ் ஏற்றுவதற்காக குத்தியிருந்த ஊசியின் வழியாக மருந்தை செலுத்தினார் அந்த நர்ஸ்.

கவலை படறதுக்கு ஒன்னும் இல்லை இனிமே. மருந்து குடுத்திருக்கேன், கொஞ்ச நேரத்துல தூங்கிருவா. அதனால நீங்களும் நல்ல தூங்குங்க..

சரிங்க. நாளைல இருந்து தண்ணி எல்லாம் குடுக்கலாம் இல்லைங்க?!?!

நாளைல இருந்து குடுக்கலாம். அஞ்சலி அப்பா வருவாங்க இல்ல?

ஆமாம். அவர் சாப்பிட்டு எனக்கும் எதாவது வாங்கிட்டு வர போயிருக்கார். அவர் கிட்ட எதாவது சொல்லனுமாங்க?

‘அவர் வந்தோன மருந்துக்கான பணம் மட்டும் கீழ பொய் கட்டிட சொல்லீடுங்க..’ என்று தன கடமையை செய்து முடித்தார் அந்த நர்ஸ்.

அஞ்சலியின் விழி மூடின அடுத்த நொடி கவிதாவும் கொஞ்சம் கண்ணயர்ந்தாள். ஆனால் அதற்கடுத்த நொடி கணவனின் குரலுக்கு மனைவியாய் விழித்து எழுந்தாள் .அவள் கணவன் கர்ணன் வாங்கி வந்த இட்லியை சாப்பிட்டுக்கொண்டே, அந்த நர்ஸ் சொன்ன விவரங்களை சொன்னாள். உடனே அவனும் போய் பணம் கட்டிவிட்டு வர,பேசிக்கொண்டே கர்ணனின் மடியிலேயே தூங்கிப் போனாள் கவிதா.

கதிரவனின் காலைக் கதிர்கள்,விடியல் வந்து விட்டது என்று சொல்லி எழுப்ப,கவிதா முதலில் எழுந்தாள்.அப்போது தான் உணர்ந்தாள் அவள் கணவனின் மடியிலேயே உறங்கிப் போய்விட்டாள் என்று.அவள் தூக்கம் களைந்து விடக் கூடாதென்பதற்காக, அப்படியே உகார்ந்துக் கொண்டே தூங்கிக்கொண்டிருந்த கர்ணனின் அன்பால் பூரித்துப் போன கவிதா,என்ன செய்வது என்று தெரியாமல் அவன் நெற்றியில் ஆசை முத்தமிட்டுச் சென்றாள்.

அடுத்த சில மணிகளில் அஞ்சலியும்,கர்ணனும் எழுந்து விட,மூவரும் ஒன்றாக பேசிக்கொண்டே காலை உணவு எடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு கர்ணன் திரும்ப, அங்கே நின்று கொண்டிருந்தார் முருகன், கை கூப்பிய நிலையில்.

என்ன முருகா?? எங்க இவ்ளோ தூரம்?

இல்லைங்கையா.. பக்கத்தில சந்தை வரைக்கும் வந்தேங்க…அப்படியே பாப்பா எப்படி இருக்குனு பாத்திட்டு போலாமேன்னு வந்தேங்க…

ஓ அப்படியா… நல்ல பார்த்துட்டு போ.. ஆத்தா அருளால நல்ல ஆயிட்டா…

‘முருகன் அருள்னு சொல்லுங்க…’ என்று சொல்லிக் கொண்டே இலை ஒன்றில் தாங்கள் சாப்பிடும் உணவை வைத்து முருகனிடம் சாப்பிடும்படி கொடுத்தாள் கவிதா.

இல்லைங்கம்மா… நீங்க சாப்பிடுங்க… நான் வீட்டுக்கு போய் சாபிட்டுகுறேன்…

‘பரவா இல்ல முருகா.. சாப்பிடு… உன் பொண்டாட்டி ஒன்னும் திட்ட மாட்டா…’ என்று சொல்லிக்கொண்டே அங்குள்ள மேசையில் வைத்தாள் கவிதா. முருகனும் கட கடவென்று சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்.

இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கர்ணன்,’அவனுக்கு முண்ணாடி என்ன அவன் அருள் கிருள்னு சொல்ற கவி… ‘ என்று கேட்டான்.

கவிதாவும் கொஞ்சம் அழுத்தமான வார்த்தையில், ‘அவன் இல்லாட்டி இணைக்கு நம்ம பொண்ணு இப்படி சிரிச்சு பேசிட்டு இருக்க மாட்டாங்க… அத மறந்துடாதீங்க… ‘ என்று கூறினாள். கர்ணன் தன மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுத்தான்.

இதை கேட்டுக்கொண்டிருந்த அஞ்சலி, ‘ஏன் மா முருகன் இல்லேன்னா நான் இப்படி இருக்க மாட்டேனு சொல்ற?’ என்று கேட்டாள்.

‘நீ கிணத்துல விழுந்துட்டீல…. அப்பா ஒரு கூரான கல்லு உன் வயிர கிழிசிருச்சு டா…. நிறைய ரத்தம் போய்டுச்சு…

உனோட குரூப் ரத்தம் அப்ப நம்ம ஊர்ல முருகன் தவிர யார் கிட்டயும் இல்ல…அவன் தான் முதல்ல உனக்கு ரத்தம் கொடுத்தான்..

அப்பறம் தான் அப்பாவோட நண்பர்கள் சில பேர் வந்து குடுத்தாங்க…’ என்று சொல்லி முடித்தாள்.

உடனே கர்ணன்,’என்னோட நண்பர்களும் இல்லேன்னா கஷ்டம் தான்’ என்று சொல்லி சப்பை கட்டு கட்டினான்.

உடனே கவிதா திருப்பி பதில் சொல்ல,இருவரும் மாறி மாறி விளையாட்டாக பேசிக்கொண்டிருந்ததில்,அஞ்சலியின் முகம் வாடிப் போனதை கவனிக்க மறந்தார்கள்.அன்று முழுவதும் அஞ்சலி கொஞ்சம் தன்னிலை மறந்த்வாளாகவே இருந்தாள்.அவ்வளவாக யாரிடமும் பேசவில்லை.சரியாக சாப்பிடவில்லை.கவிதாவும் கர்ணனும் உடல் களைப்பு என்று நினைத்துக்கொண்டு அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. அன்றைய நாள் கழிந்தது. அஞ்சலியின் இரு கண்ணிமைகளும், நீண்ட காலம் பிரிந்து சேரும் காதலர்கள் மாதிரி ஒரு சேர துடித்தன. சிறிது நேரத்தில் அஞ்சலி தூங்கிப் போனாள். அடுத்த நாள் வீட்டுக்கு போகலாம் என்று மருத்துவர் கூறிவிட்ட சந்தோஷத்தில் கவிதாவும் கர்ணனும் மன நிம்மதியுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அங்கே இருந்த படுக்கையில் கண் அயர்ந்தார்கள்.

இரவுப் பொழுது அமைதியாக நகர, திறந்த ஜன்னல் கதவுகள் மட்டும் அடித்துக் கொண்டு காற்றில் ஜதி போட்டுக்கொண்டிருந்தது. சத்தத்தில் எழுந்த கவிதா, ஜன்னல் கதவை சாத்திவிட்டு, அஞ்சலி பக்கம் திரும்ப அதிர்ச்சி அடைந்தாள். நடப்பது ஒன்றும் கனவல்ல என்று உறுதிப் படுத்த தூக்கத்தில் இருந்து தன்னை கொஞ்சம் சுதாரித்துக்கொண்டாள்.நடப்பது உண்மை தான் என்று தெளிந்ததும் கலக்கமடைந்தாள்.ஒரு நொடி கொஞ்சம் கலங்கிப் போனாள். அஞ்சலியை நோக்கி ஓடிச் சென்றாள்.

அஞ்சலி தூக்கத்தில் எதோ சொல்லிக்கொண்டே தன்னை அறியாமல் அழுது கொண்டிருந்தாள். கவிதா என்ன செய்வது என்று தெரியாமல், கர்ணனை எழுப்பி இந்த விஷயத்தை சொன்னாள். பதறி அடித்து எழுந்த கர்ணனும் கவிதாவும் அஞ்சலியின் படுக்கைக்கு போனார்கள். இப்பவும் அவள் உதடுகள் ஏதோ புலம்பிக்கொண்டிருக்க, கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. கவிதா பயந்து கொண்டு கண் கலங்க, அவளை சமாதனப்படுத்திக்கொண்டே, அஞ்சலி அப்படி என்ன தான் சொல்கிறாள் என்று கொஞ்சம் கூர்ந்து கவிநிதார்கள் இருவரும்.

அந்த முனங்களில் ‘அப்பா என்னை விட்டுறாதீங்க..’ என்று திரும்ப திரும்ப சொல்வதை உணர்ந்தார்கள். அவர்கள் குழப்பம் இன்னும் அதிகமானது. கடைசியில் மெதுவாக அஞ்சலியை எழுப்பி என்னவென்று கேட்டுவிடலாம் என்று முடிவு பண்ணி அஞ்சலியை எழுப்பினார்கள். அஞ்சலியும் எழுந்தாள் மிகவும் குழம்பிய தோற்றத்துடன்.

என்னடா ஆச்சு? எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க செல்லம்???, என்று கவிதா கேட்க,வெறும் அழுகையை மட்டுமே விடையாக தந்தாள் அஞ்சலி. போகப் போக அவளின் அழுகை கனவில் இல்லாமல் சுயநினைவிலும் தொடர்ந்தது. மிகவும் குழம்பிப்போன கவிதாவும் கர்ணனும் மெல்ல மெல்ல அஞ்சலியை சமாதானப்படுத்தி அவள் மனதில் இருந்துகொண்டு அவளை வதைதுக்கொண்டிருக்கும் ஒன்றை தெரிந்துகொள்ள முயன்றனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சலி மனம் திறந்தாள்; அதனால் அவள் வாயும் திறந்தது; இம்முறை அழுவதர்கல்ல, உண்மை மொழிவதற்கு.

இல்ல மா… அன்னைக்கு ஒரு நாள் நான் நம்ம தோட்டதில விளையாண்டுட்டு இருதேனா… அப்போ நம்ம வீட்ல வேலை செயற முருகனும், மத்த கொஞ்ச பேரும் அப்பாவ பாக்க வந்தாங்க.. அப்ப நம்ம பக்கத்துக்கு வீட்டு அக்காவ அவங்க வீட்டுல இருந்து வெளிய அனுப்ப சொல்லியும்… இனிமே முருகன் கூடவே இருந்திட சொல்லியும்… அந்த அக்கா கூட அவங்க அப்பா அம்மா யாரும் பேச கூடதுனும், பாக்க கூடதுனும்… அப்பா சொன்னாங்க… அவங்களும் சரின்னு சொல்லிட்டு அந்த அக்காவ முருகன் கிட்ட விட்டுட்டு போய்டாங்க… அந்த அக்காவும் முருகன் கூட அழுதுட்டே போனாங்க…

அவங்க எல்லாரும் போன பிறகு, ஏன் அப்படி சொண்ணீங்கனு அப்பா கிட்ட கேட்டேன்… அந்த அக்கா முருகன தொட்டுடாங்க… அதனால தான் அப்படி சொன்னேன்னு அப்பா சொன்னாங்க… ஏன் பா, முருகன தொட கூடதனு அப்பா கிட்ட கேட்டதுக்கு, அவங்க எல்லாம் ஏதோ கீழ் ஜாதி மக்கள்… அவங்கள தொடுறது பெரிய தப்புனு… அதனால தான் அந்த அக்காக்கு அந்த தண்டனைனு அப்பா சொன்னாங்க…. என்னையும் முருகன் மாதிரி இருகிறவங்கள தொட கூடாதுன்னு அப்பா சொன்னாங்க…

இவையெல்லாம் சொல்லி விட்டு சிறு நொடிகள் மௌனமானாள் அஞ்சலி. அந்த நொடிப் பொழுதின் மௌனம கூட பொறுக்க முடியாமல் கர்ணன்,

‘அதுக்கும் நீ அழுகிறதுக்கும் என்ன மா சம்மந்தம்??’ என்று குழம்பிப்போனவனாய் கேட்டான்.

‘இல்ல பா.. இப்ப முருகன் தான எனக்கு ரத்தம் குடுத்து என்ன காப்பாதிருக்கிறான்… சும்மா அவன தொட்டாலே பெரிய தப்புன்னு சொல்லி அந்த அக்காவ இனிமே அவங்க அப்பா அம்மா பாக்க கூடாது, பேச கூடாதுன்னு சொல்லிட்டீங்க… ஆனா இப்ப அந்த முருகனோட ரத்தமே என்னோட உடம்பு குள்ள ஓடுது… அதனால இது அத விட பெரிய தப்புன்னு சொல்லி… உங்கள, அம்மாவ விட்டு போக சொல்லிடுவீங்களோனு தான் பயந்துட்டு அழுகிறேன் பா…’, என்று சொல்லி, அதற்கடுத்த நொடியில்,

‘என்னையும் உங்கள எல்லாத்தையும் விட்டு அனுப்பீருவீன்களா அப்பா???’ என்று கேட்கும் போதே அவள் அழுகை மீண்டும் எட்டிப் பார்க்க, கர்ணன் சொல்வதறியாது அஞ்சலியை கட்டிப்பிடித்து கதறியழுதான். அவ்வழுகையில் அவன் செய்த பாவங்கள் கரைந்திடும் என்ற நம்பிக்கையில்.

Advertisements

2 thoughts on “மனிதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s