நம்ம ஆட்களா ???

என்னடா தலையும் இல்லாம வாலும் இல்லாம இப்படி ஒரு தலைப்பு வச்சிருக்கனேனு யோசிக்கறீங்களா???? நிஜமாவே இதற்கு என்ன தலைப்பு வைக்கிறதுனு எனக்கு தெரியல… பொதுவா மக்கள்(என் ஊரில் சில பேர்..) இத பத்தி கேட்கனும்னா இப்படி தான் கேட்பாங்க… அதனால அதையே தலைப்பா வச்சுட்டேன்.. என்னடா இவன் விஷயத்த சொல்லாம இப்படி தலைப்பு பத்தி பேசி மொக்கை போடறானு நினைக்குறது புரியுது சகாக்களே… இதோ விஷயத்துக்கு வரேன்….

அதாங்க… “ஜாதி”‘ங்கற பேர்ல பயங்கரமான ஜந்து ஒன்னு உலகத்துல பல இடத்துல கெட்ட ஆட்டம் போட்டுட்டு இருக்கே… அத பத்தி தான் இங்க எழுதுறேன்.. இந்த ஜந்து பற்றி விவரம் தெரிஞ்ச நாளிலிருந்தே, இது எனக்கு பிடிக்காத ஒன்றாகிவிட்டது… ஓரளவு பக்குவம் வந்த இந்நிலையில் யோசித்துப் பார்த்தால் பிடிக்காமல் போனது ரொம்ப நல்லதுன்னு படுது.. இந்த ஜாதி என்ற ஒன்று வீட்டில் நடக்கிற சின்ன சின்ன விஷயங்களிலிருந்து, நாட்டில் நடக்கிற பெரிய பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திலும் தன் தீய முகத்தை காட்டி வருகிறது… அதனால இதை ஒழிப்பதற்கான என்னோட பங்காக ஒரு விழிப்புனைவை ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்தில் என் கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்..

இன்னும் நியாபகம் இருக்கு… பல நாள் நண்பர்களில் யாரையாவது என் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவேன்.. அப்போது பல முறை ஒரு கேள்வி என் தாத்தா அல்லது பாட்டியிடம் இருந்து வந்திருக்கிறது… அந்த கேள்வி என்னவென்றால், ‘அந்த பையன் நம்ம ஆட்களா…??’ அப்போதெல்லாம் என்னிடமிருந்தும் ஒரு கேள்வி உடனே அவர்களிடம் சென்றுள்ளது…’ஜாதியை தெரிந்து என்ன செய்யப் போறீங்க????’ என்னை பொறுத்த வரை, அந்தக்காலத்து மனிதர்கள் ஜாதியை வைத்து தங்களுக்குள் ஒருவரை பற்றி ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.. அது சில நேரம் நல்ல அபிப்ராயமாக இருக்கும்… சில நேரம் தப்பான ஒன்றாகவும் இருக்கும்… இந்த ஜாதி ஒருவரை பற்றிய நமது எண்ணத்தை,பல முறை உண்மைக்கு நேர் மாறாக மாற்றி அமைக்கிறது… இன்னும் அந்தக் காலத்து மனிதர்களிடம் இந்தப் பழக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது… இந்த மக்கள் ஒருவனை அவனுடைய ஜாதியை வைத்து பார்ப்பதற்கு பதிலாக, அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் முதலிடமாக வைத்து மறுக்கின்றார்கள்…

ஜாதி இல்லை என்று சொன்ன புரட்சிக் கவிஞன் பாரதி...
ஜாதி இல்லை என்று சொன்ன புரட்சிக் கவிஞன் பாரதி...

சரி.. அந்தக் காலத்து மனிதர்கள் தான் அப்படி…இந்தக் காலத்து மனிதர்கள் மாறியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… ஆனால் நீ நினைத்து கொண்டிருப்பது தப்புடா என்று சொல்வது போல் என் வயதுக்காரர்கள் சிலர் நடந்துக் கொண்டார்கள்.. ஒரு நாள் நானும் என் நண்பர்களும் சும்மா கதை பேசி மொக்கை போட்டுட்டு இருந்தோம்… இப்படி நண்பர்கள் பேசினால் சொல்லவா வேண்டும்…அது எங்கேயோ ஆரம்பித்து, ஸ்கூல், காலேஜ், சினிமா, அரசியல் என்று எங்கெல்லாமோ போகுமே… அப்படித்தான் அன்றும் ஏதோ பேச ஆரம்பித்து அது கடைசியில் ஒரு நண்பன் வீட்டில் நடப்பவை நோக்கி சென்றது…அப்போது ஒருவன், அவர்கள் ஊரில் முடி திருத்துபவரை,பெயர் சொல்லித்தான் அழைப்பேன் என்று சொன்னான்… இது சின்ன விஷயம் என்று தானே நாங்கள் நினைக்குறீங்களா?? கண்டிப்பாக இல்லை… உடனே நான் அவரது வயது என்ன என்று கேட்டேன்… அவர் வயது முதிர்ந்தவர் என்றும்… தன் அப்பாவை விட முதியவர் என்றும் சொன்னான்… அந்த ஊர் பக்கம், எல்லாரையும் ‘வாங்க’, ‘போங்க’ என்று மரியாதையுடன் தான் அழைப்பது வழக்கம்… ஏன்… பல பேர் வீட்டில் நான் சின்ன குழந்தையை கூட வாங்க போங்க என்று மரியாதையுடன் பேசி பழக்குவார்கள்… நான் ஏன் அப்படி கூப்பிடுகிறாய்… அவரையும் எல்லாரையும் போல மரியாதையுடன் கூப்பிடலாம் அல்லவா என்று கேட்டேன்…அதற்கு அவன் கூறினான்… அவர் ஒரு நாசுவன் தான… அப்படி கூப்பிட்டு தான் பழக்கம் என்றான்… தான் பரவாயில்லை, தன் இளையவர்கள் அதை விட மோசமாக கூப்பிடுவார்கள் என்று சொன்னான்…

எனக்கும், என்னோடு இருந்த இன்னொரு நண்பனுக்கும் இது தப்பாக தோன்றியது… அவரும் உன்னை மாதிரி மனிதர் தானே… அவர் வயதுக்காரர்களுக்கு அவரவர் வயதுக்கேற்ப மரியாதையை கிடைக்கும் போது… அவர் மட்டும் இப்படி அழைக்கப்பட்டால்… அவர் மனம் கஷ்டபடாதா என்று கேட்டால், அதெல்லாம் படாது என்று சொல்கிறான்… ஏனென்றால் அவர்களை அப்படியே பழக்கப்படுத்தி விட்டார்கள் பாவம்… உடனே நான் அவனிடம்… யாராவது ஒருவர் உன் தந்தையை இப்படி மரியாதையை இன்றி கூப்பிட்டால் பொறுத்துக் கொள்வாயா என்று கேட்டேன்… அதற்கு அவன் முடியாது என்று பதிலளித்தான்…உடனே நானும் இன்னொரு நண்பனும்… அதே மாதிரி தானே அவருடைய மகனும் வருத்தப் படுவான் என்று சொன்னோம்… இதன்னை கேட்டு அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டதை உணர்ந்தேன்…
இதற்கு அப்புறமாவது அவரை மரியதியுடன் அழைப்பாயா என்றால்… மாட்டேன் என்று கூறினான்… தான் செய்வது தப்பு என்று உணர்ந்தும் அதை திருத்திக் கொள்ள அவன் நினைக்கவில்லை… அவன் மாற தயாராக இல்லை… நீ உங்கள் மக்களுக்கு முன்னால் இப்படி மாறி ஒரு புது எடுத்துக்காட்டாக இரு என்று என்றால் அதற்கு அவன் முயற்சி செய்யக்கூட தயாராக இல்லை…

எது அவனை தடுக்கிறது என்பது தெரியவில்லை… தான் அவரை விட உயர்ந்த ஜாதி என்ற மனப்பான்மையா… இல்லை என்ன சொன்னாலும் அவர் திரும்ப எதிர்த்து பேசுவது இல்லை என்ற நினைப்பா… இல்லை  இன்னொருவர் சொல்லி நான் என்ன கேட்பது என்ற எண்ணமா என்று தெரியவில்லை எனக்கு… படித்து,வெளியுலகம் தெரிந்த, கம்ப்யூட்டர் உலகில் வாழும் ஒருவனே இப்படி என்றால்… படிக்காத பாமர மக்களை என்ன சொல்வது பாவம்… அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவனே இப்படி என்றால்…அவர்கள் திசை மாறிப் போகாமல் எப்படி இருப்பார்கள்… தூங்குபவனை எழுப்பி விடலாம்… தூங்குகிற மாதிரி நடிக்கும் ஒருவனை எப்படி எழுப்புவது… அவனோ முயற்சி கூட செய்யப்போவதில்லை என்பதில் முடிவாக இருக்கிறான்… என்னை பொறுத்த வரை இவர்கள் இக்காலத்து மனிதன் என்பதை தோற்றத்தில் மட்டுமே காட்டுகின்றார்கள்.. தங்கள் நடைமுறையில் அல்ல..

தான் சாப்பிடுகிற உணவு, உடுத்தும் உடை, தனக்கு சம்பளம் தரும் நிறுவனம், இவைகளில் மற்றும் மக்கள் ஜாதியை பார்ப்பதில்லை… ஏனென்றால் இவைகள் இல்லாமல் வாழ முடியாது… தனக்கு யாரவது ரத்தம் கொடுத்தால் உயிர் பிழைத்து விடலாம் என்ற நிலையில், ரத்தம் கொடுபவரின் ஜாதியை யாரும் கேட்பதில்லையே.. வேறு ஜாதிக்கரனை தொட்டாலே பாவம் என்று எண்ணுகிற மக்கள் அவர்கள் உடம்பில் இருக்கும் ரத்தத்தில் மட்டும் ஏன் ஜாதி பார்ப்பதில்லை??? அதற்கு மட்டும் அனுசரித்து போகின்ற மக்கள் ஏன் மற்ற இடங்களில் அப்படி நினைக்க மறுக்கிறார்கள்??? தனக்கு பாதிப்பு என்றால் மட்டும் ஜாதி வேண்டாம்… மற்றவர்களுக்கு பாதிப்பு என்றால் அதே ஜாதி வேண்டுமாம்… இது கொஞ்சம் சுய நலமாகவே தெரியவில்லை???? இந்த சுயநலவாதிகள் ஜாதியை வளர்கிறேன் என்று சொல்லிக்கொண்டு மனித நேயத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்… தங்களின் சுயநல கொள்கையினால் இந்த சமுதாயத்தின் வளர்ச்சியை தடுத்து வருகின்றார்கள்…

எப்போதோ ஒரு காலத்தில், மக்கள் தாங்கள் செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டு உருவாக்கிய ஒன்று தான் ஜாதி…  யார் வேண்டுமானாலும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற இந்த காலத்தில் கூட அந்த ஜாதியைக் கட்டிக் கொண்டு அழுவது முட்டாள் தனமாகவே எனக்கு தெரிகிறது.. பல பேர் “மக்களால் உருவாக்கப்பட்டதே ஜாதி என்பதை மறந்து, ஜாதிக்காகவே மக்களாகிய நாம் வாழ்கின்றோம்’ என்று சொல்வது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை ஒழுங்கு படுத்தி மக்களை வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமையை கொண்டுள்ள அரசியல்வாதிகளோ ஓட்டுக்காக ஜாதிக்கொரு கட்சியை ஆரம்பித்து மக்களை இன்னும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்..

என்னைப் பொருத்த வரை,இந்த ஜாதி என்ற ஒன்று அழிய,இப்போதுள்ள காலகட்டத்தில் யுக்திகள் இருக்கிறது .ஒன்று நட்பு… மற்றொன்று காதல் திருமணம்… அதனால் பெற்றோரர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக தப்பு என்று சொல்லவில்லை.. நான் ஏன் காதல் திருமணம் என்று சொன்னேன் என்றால், இந்த திருமணங்கள் தான் ஜாதி பார்ப்பதில்லை.ஆனால் நம் பெற்றோரர்கள் காதல் திருமணங்களை ஏற்கும் அளவிற்கு இன்னும் பக்குவம் அடையவில்லை.நம் தலை முறையினர் காதல் திருமணங்களை ஏற்கும் அளவிற்கு ஓரளவு மாறியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.இந்த சமுதாயம் ஜாதியை ஒழிக்க பெருமளவு மாற வேண்டி இருக்கிறது.மாறும் என்று நம்புவோம்.

எனவே நாமாவது இந்த கொடிய ஜாதியை ஒழிக்க மக்களிடம் நம்மால் முடிந்த வரை, நமக்கு தெரிந்த வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.நம் வருங்காலத்தில் வரும் குழந்தைகளிடம் ஜாதியை பற்றி கூறாமல், மனித நேயத்தை பற்றி பேசுவோம்.”ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி பாடிய பாட்டை பள்ளி முடிந்ததும் மறந்துவிடாமல், நம் வாழ்க்கை முழுதும் மனதில் வைத்துக் கொண்டு செயல் படுவோம்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s